வீடியோ கேம்ஸ் ஆடுவது புதிய மனநோய்: – உலக சுகாதார நிறுவனம்

ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் உலக சுகாதார நிறுவனம் திருத்தப்பட்ட சர்வதேச நோய் குறியியல் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த புதிய பட்டியலில் சிறிய இடைவெளிகளில் அவ்வப்போது கட்டாயமாக வீடியோ கேம்ஸ் ஆடியே தீர வேண்டும் என்ற ஆர்வம் புதிய மனநோயின் தாக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

’கேமிங் டிஸார்டர்’ என்னும் இந்த குறைபாட்டை சுட்டிக்காட்டுவதன் மூலம் இதற்கான அடையாளங்களை உலக நாடுகளில் வாழும் மக்கள் முன்னதாகவே அடையாளம்கண்டு எதிர்கொள்ள முடியும் என உலக சுகாதார நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. அறிவியல் பூர்வமான ஆதாரத்தின் அடிப்படையில் இந்த ‘கேமிங் டிஸார்டர்’ என்னும் மனநோய் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் மனவளத்துறை இயக்குனரான சேகர் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இந்த கருத்தை பிரிட்டன் நாட்டின் உளவியலாளர்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஜோன் ஹார்வே மறுத்துள்ளார். வீடியோ கேம்ஸ் ஆடுபவர்களில் சிறு பிரிவினர் மட்டுமே இந்த பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இவ்விவகாரத்தை புதிய நோய் குறியியல் பட்டியலில் இணைப்பதால் பெற்றோருக்கு தேவையில்லாமல் கவலை ஏற்படலாம் என இவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!