‘இலவசமாக தடுப்பூசியை போட அமெரிக்க அரசு விரும்பினாலும், மக்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டும்’ – வெளியான புதிய தகவல்!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று, அமெரிக்க வல்லரசை பாடாய் படுத்துகிறது. அங்கு 68.58 லட்சம் பேரை பாதித்துள்ள இந்த தொற்று, ஏறத்தாழ 2 லட்சம் பேரின் உயிர்களை பலி வாங்கி உள்ளது. அங்கு தடுப்பூசியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. வரும் நவம்பர் 3-ந் தேதி நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக போடுவதற்கு கொரோனா வைரஸ் உதவி மற்றும் பொருளாதார பாதுகாப்பு சட்டம், கடந்த மார்ச் மாதம் இயற்றப்பட்டது. இது மெடிகேர் சுகாதார காப்பீட்டு திட்டத்தின்கீழ் வருகிறவர்களுக்கு பலன் அளிக்க வகை செய்துள்ளது. அதே நேரத்தில், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டியது வரும் என்ற புதிய தகவலை ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள சுகாதார காப்பீட்டு திட்டம், அவசர கால பயன்பாட்டு பெயர்களில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கான செலவுகளை ஈடுகட்டாததால், இது கோடிக்கணக்கான மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை போட அரசு விரும்பினாலும், மக்கள் அதற்கான விலையை தங்கள் சொந்தப்பணத்தில் இருந்து தர வேண்டியது வரும் என்பதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை உணர்ந்துள்ளது என ‘வால்ஸ்டிரீட்’ பத்திரிகை கூறி உள்ளது,

தற்போது அமெரிக்காவில் 4 கோடியே 40 லட்சம் மக்கள் உள்ளதாகவும், 15 சதவீதத்தினர் மெடிகேர் சுகாதார திட்டத்தின்கீழ் வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் அவசரகால பயன்பாட்டு பெயர்களில் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கான செலவுகளை ஈடுகட்டும் வகையில் கொரோனா வைரஸ் உதவி மற்றும் பொருளாதார பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தை வாஷிங்டன் வெள்ளை மாளிகை வலியுறுத்தும் என தெரிகிறது. ஆனால் தடுப்பூசி வருவதற்கு முன்னர் இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!