விடுதலைப்புலிகளின் அரசியல்துறைத் தலைவரே சம்பந்தன் – சபையில் சரத் வீரசேகர!

இரா.சம்பந்தன் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர் என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ”யுத்த காலகட்டத்தில் விடுதலைப்புலிகளினால் அதிகளவிலான சிங்கள, முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்களை மீண்டும் வடக்கில் குடியேற்றி அவர்களின் தேர்தல் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டும். விரட்டியடிக்கப்பட்ட மக்கள் இன்று எங்கு உள்ளனர்? அவர்களுக்கு தேர்தல் உரிமை உள்ளதா? என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.” என்றாா்.

தொடா்ந்து உரையாற்றிய அவா்,”கடந்த ஆட்சியில் அரசியல் அமைப்பு சபையில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவின் கையாள்களாக இருந்து தீர்மானம் எடுத்தனர்.அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆர்.சம்பந்தன் எப்படிப்பட்டவர் என்றால் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர். இவர்கள் இருவரும்தான் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமித்தனர். அவர்களில் ஒருவர் தான் ரட்ணஜீவன் ஹூல்.

நல்லாட்சியில் நடந்த ஊழல் குற்றங்களின் போது, வழக்குகள் தொடுக்காத ஹூல் 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது முதலாவது வழக்கை தொடுத்தார்.தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள பக்கச்சார்பான, என்.ஜி.ஓ காரர்களை நீக்க எமக்கு 20 வது திருத்தம் வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!