இந்தியப் பெருங்கடல் சுதந்திரமான வலயமாக இருக்க வேண்டும்!

இந்தியப் பெருங்கடல் எல்லா நாடுகளுக்கும் திறந்து விடப்பட்ட சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு நாடுகளின் தூதுவர்களை நேற்று சந்தித்து, அவர்களின் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

தென்கொரியா, ஜேர்மனி, வத்திக்கான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் நேற்று ஜனாதிபதியை சந்தித்தனர். இதன்போது கருத்து வெளியிட்டஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்ச,

“2009 இல் பயங்கரவாதத்தை தோற்கடித்த பின்னர், விரைவான அபிவிருத்தியை அடைவதே அரசாங்கத்தினதும், மக்களினதும் முன்னுரிமையாக இருந்தது. தீவிரவாதத்தினால் பொருளாதாரம் பலவீனமடைந்திருந்தது. வேகமான அபிவிருத்திக்கு வெளிநாட்டு முதலீடுகளை கோரினோம்.

நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்ய சீனா முன்வந்தது. இது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிமாற்றமாக மட்டுமே இருந்தது. ஆனால் சிலர் இதனை சீன சார்ப்பு கொள்கை என்று வர்ணித்தனர். இலங்கை எல்லா நாடுகளுக்கும் நண்பனாக உள்ளது.

சீனாவின் நிதியுதவியுடன் அம்பாந்தோட்டை துறைமுகம் அமைக்கப்பட்ட போது, சிலர் அதனை ‘கடன் பொறி’ என்று அழைக்கின்றனர்.

முந்தைய அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு கொடுத்தது. எனினும் அது வணிக நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் எல்லா நாடுகளுக்கும் திறந்து விடப்பட்ட சுதந்திர வலயமாக இருக்க வேண்டும். கேந்திர ரீதியில் முக்கியமான இடத்தில் இலங்கை அமைந்துள்ளது, எனவே, பல தரப்புகளின் கவனம் எமது நாட்டின் மீது இருக்கிறது.

இந்த சூழலில், இலங்கை நடுநிலயைப் பேணும் வெளியுறவுக் கொள்கையாக தேர்ந்தெடுத்துள்ளது.” என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!