‘கொரோனா தொற்று கண்டு பயப்பட வேண்டாம்’ – டிரம்ப் அறிவுரை!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு திரும்ப இருப்பதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக வெள்ளை மாளிகையில் இருந்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட டிரம்ப், இதனிடையே தமது கட்சி ஆதரவாளர்களை சந்திக்க, மருத்துவமனையில் இருந்து காரில் வெளியே வந்தார்.

அந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தமது கொரோனா குறித்து பயம் இல்லை எனவும், இன்றே தாம் வெள்ளை மாளிகைக்கு திரும்ப உள்ளதாகவும் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கொரோனா தொற்று கண்டு பயப்பட வேண்டாம் எனவும், அதை உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நாம் அளப்பரிய அறிவையும் சிறந்த மருந்துகளை உருவாக்கியுள்ளோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தாம் சிறப்பாக உணர்வதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே, வெள்ளை மாளிகையின் முக்கிய அதிகாரி ஒருவர், ஜனாதிபதி டிரம்ப், விரைவாக குணமடைந்து வருவதாகவும், சாதாரண நிலைக்கு அவர் மிக விரைவில் திரும்புவதுடன் அன்றாட பணிகளிலும் ஈடுபடுவார் என தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, டிரம்ப் தாம் வெள்ளை மாளிகைக்கு இன்றே திரும்ப இருப்பதாக அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!