இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் அறிவுறுத்தல்!

வடக்கில் கொரோனா தொற்றுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், எனவே யாழ்ப்பாண குடாநாட்டின் கரையோரப் பகுதியில் வாழும் மக்களை, மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

தென் இந்திய மீனவர்களின் வருகையின் காரணமாக வடக்கில் கொரோனா தொற்றுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டின் கடற்கரையை அண்டியுள்ள பகுதியில் உள்ள மக்கள், மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய மீனவர்களுடன் தொடர்புகளை சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வகையில், பொதுமக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொரோனா தொற்று தொடர்பில் வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று, வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரெட்ணவும், தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஊடாகவும், ஏனைய மாகாணங்களில் இருந்து வருபவர்களின் மூலமும், வடக்கில் கொரோனா பரவும், சாத்தியங்கள் உள்ளதாவ அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, வடக்கு மாகாண மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருவோர் குறித்து, மிகவும் அவதானமாக இருக்குமாறும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

பொதுஇடங்களில் ஒன்று கூட வேண்டாம் என்றும், அவசியமின்றி வீதிகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரெட்ணம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!