மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது “20” !

20 ஆவது திருத்தச் சட்டம், நேற்றிரவு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 உறுப்பினர்களின் ஆதரவுடனேயே அரசாங்கம் இந்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

நாடாளுமன்றத்தில் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் மீது நேற்று முன்தினம் காலை விவாதம் ஆரம்பமாகி, இரவு 7.30 மணிவரை இடம்பெற்றது. பின்னர், இரண்டாவது நாளாக, நேற்றுக் காலை 10 மணிக்குத் தொடங்கிய விவாதம், இரவு 7.30 மணிவரை தொடர்ந்து இடம்பெற்றது.

இதனையடுத்து, எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், 20 ஆவது திருத்தச் சட்டம் குறித்த விவாதத்தை முடித்து வைத்து நீதியமைச்சர் அலி சப்ரி உரையாற்றினார். இதனை அடுத்து, நேற்றிரவு 7.40 மணியளவில் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில், 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக, 156 வாக்குகள் கிடைத்தன. எதிராக, 65 வாக்குகள் கிடைத்தன. இதனையடுத்து, குழுநிலை விவாதம் ஆரம்பமானது.

இதன்போது, திருத்தச் சட்டமூலத்தின் ஒவ்வொரு பிரிவிலும், திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன. இறுதியில், மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போதும், ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, 20 ஆவது திருத்தம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், இரண்டு உறுப்பினர்கள் இன்னமும் நியமிக்கப்படாத நிலையில், நேற்றைய அமர்வில் சபாநாயகர் தவிர 223 உறுப்பினர்கள் சபையில் சமூகமளித்திருந்தனர்.

நேற்றைய வாக்கெடுப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் இருக்கவில்லை. அதேவேளை வாக்கெடுப்பின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபையில் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!