நாடாளுமன்ற பேரவைக்கு டக்ளஸ்! – அனுப்புகிறார் பிரதமர் மஹிந்த.

நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் அடிப்படையில், 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு, குறித்த நாடாளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்.

சபாநாயகர், பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த நாடாளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள்.

அதனடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

19ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களைக் கொண்ட அரசமைப்புப் பேரவைக்கு பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!