நாட்டில் 130க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா!

நாட்டில் 130க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொரளை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் 7 பேர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், 2 ஆயிரத்து 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அவர்களில் 300 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும், 2 ஆயிரம் பேர் சுய தனிமைப்படுத்தலிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 26 பேர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் 12 க்கும் மேற்பட்டோர் ஆகியோருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மினுவாங்கொடை, கொஸ்கொட மற்றும் கரையோர பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் பணி புரியும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரவழைக்கப்பட்டு குறித்த பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு இன்றைய தினம் PCR பரிசோதனைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொரோனா தொற்றாளர் பணியாற்றிய நீர்கொழும்பு நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட பகுதிகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, நீர்கொழும்பு பிரதான சுகாதார பணியாளர் MKUK குணரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!