முஸ்லிம்களின் உடல்களை எரிப்பது குறித்து மீள் பரிசீலனை

கொரோனா தொற்றின் ஊடாக, அரசாங்கம் ஒரு இனத்தை மாத்திரம் குறிவைத்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“சபாநாயகரே, கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்ளை அவர்களது குடும்பத்தினரின் விருப்பத்தின் பிரகாரம், புதைக்கவோ, எரிக்கவோ முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனைத்து பரிந்துரைகளையும் பின்பற்றுவதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.ஆனால் முஸ்லிம் மக்கள் அல்லது இஸ்லாமியர்களே கொரோனாவை பரப்புவதாக கூறி, முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து ஒரு கதையை உருவாக்கியுள்ளார்கள்.இஸ்லாம் மதத்தில் அவர்களின் கலாசாரத்தின் அடிப்படையில் உடல்களை எரிப்பது பாவமான செயலாகும்.ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் மிகவும் தீவிரவாத தீர்மானமொன்றை மேற்கொண்டது. இதன் உண்மைத் தன்மை குறித்து அமைச்சர் அலி சப்ரியின் மனசாட்சிக்குத் தெரியும்”

இந்த நிலையில், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படும் விவகாரத்தை, அரசியல்மயப்படுத்த வேண்டாம் கோரிக்கை விடுத்தார்.

“எதிர்க் கட்சித் தலைவர் அவருடைய உரையின் போது, என்னுடைய பெயரைக் குறிப்பிட்ட காரணத்தினால், இது தொடர்பில் நான் தெளிவுபடுத்த வேண்டும்.கொரோனா என்பது எமது நாட்டுக்கு மாத்திரம் இன்றி முழு உலகுக்கும் சவால்மிக்க ஒரு நோய் என்பது எமக்குத் தெரியும்.நாம் அனைவரும் இந்த சவாலுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.முஸ்லிம்களின் உடல்களை எரிப்பது குறித்து ஒரு பிரச்சினை இருக்கின்றது என்பது எமக்குத் தெரியும்.ஆனால் அதனை அரசியலாக மாற்றுவது பொருத்தமில்லை.இது தொடர்பில் மூன்று விசேட வைத்திய நிபுணர்களுடன் இன்னும் பல விசேட வைத்திய நிபுணர்களை அனுப்பி இது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு ஆறு மாதங்களுக்கு முன்னர் நாம் கோரிக்கை விடுத்தோம்.இதன் ஊடாக எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து விஞ்ஞான ரீதியில் அவர்களுக்கு ஒரு அச்சம் காணப்பட்டது.ஆறு மாதத்திற்குள் இது தொடர்பில் மீள் பரிசீலனை செய்வோம் என்று அவர்கள் கூறினார்கள்.அது தொடர்பில் நாம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.இதனை அரசியலாக மாற்ற வேண்டாம்.அரசியல் செய்தால் மக்கள் நம் ஒவ்வொருவரையும் எதிரிகளாகவே பார்ப்பார்கள்.எனவே இந்தப் பிரச்சினையை பொறுமையாக தீர்க்க மனிதாபிமான முறையில் பார்க்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.”

இந்த நிலையில், நீதியமைச்சர் அலிசப்ரியின் கருத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு பதிலளித்தார்

“நீதியமைச்சர் தற்போது சில விளக்கங்களை முன்வைத்தார்.அவரின் கருத்தின் பிரகாரம் அந்த விசேட குழுவை நியமிக்குமாறு கோரி தற்போது ஆறு மாதங்கள் ஆகின்றன.இந்தக் குழுவை அமைக்க ஆறு மாத காலத்திற்குள் சுகாதார அமைச்சு எந்தவித பதில்களையும் வழங்கவில்லை.இதனை காலதாமதப்படுத்தாது உரிய குழுவை நியமித்து, அடக்கம் செய்வதற்கான முஸ்லிம் மக்களின் உரிமையைப் பெற்றுத் தருமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.இதனை தாமதப்படுத்த வேண்டாம்.இன்று வரை 9 பேர் எரிக்கப்பட்டுள்ளார்கள்”

இந்த நிலையில், முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படும் விவகாரம் குறித்து, இந்த வாரம் மீள் பரிசீலனை செய்யப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

“இது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவுடன் கலந்துரையாடியுள்ளோம். இது உலகத்தில் யாரும் பார்க்காத வைரஸ். இதனால் இது தொடர்பில் ஆழமாக ஆராய்ந்தே தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினார்கள். அத்துடன் சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமையவே உடல்களைப் புதைக்காது அவற்றை எரிக்க நாம் தீர்மானித்தோம். இது தொடர்பில் அவர்கள் ஆய்வுரீதியான விடயங்களையும் முன்வைத்தார்கள். ஆனால் நீதியமைச்சர் அலிசப்ரியின் கோரிக்கைக்கு அமைய, அந்தக் குழுவை நியமித்துள்ளோம்.அந்தக் குழு இந்தவாரம் கூடவுள்ள நிலையில், அது தொடர்பில் மீள பரிசீலனை செய்யவுள்ளோம்”

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!