பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மாத்திரமல்லாது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் ஒன்றுகூடல்களை தவிர்த்து செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மேல் மாகாணத்தின் 112 பொலிஸ் பிரிவுகள் மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு எஹலியகொட பிரிவு அத்துடன் குருணாகல் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதியில் 26 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 2 ஆயிரத்து 532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 382 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்றுவரையான காலப்பகுதியில் பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்கத் தவறிய மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறிய 96 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக எதிர்வரும் காலங்களில் வழக்குத் தொடரப்படும். மேலும், வார இறுதி நாட்களில் விளையாட்டு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள் மற்றும் ஒன்றுகூடல்களில் ஈடுபடுவதை தவிர்த்து செயற்பட வேண்டும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மாத்திரமல்லாது ஏனைய பகுதிகளில் உள்ள மக்களும் குறித்த விதிமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்” என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!