கூட்டமைப்பு தொடர்ந்தும் தோல்வியையே சந்திக்கும் : அநுர பிரியதர்சன யாப்பா!

நாட்டில் அனைத்து இனங்களும் ஒருமித்து வாழ்வதற்காக ஒரு சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளதாகவும், அது தவிர்ந்து பொய்யான தகவல்களை முன்வைக்க வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்துக்களுக்கு பதிலளித்து பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டில் அனைத்து இனங்களும் தமது விருப்பத்தின்படி வாழ்வதற்கு, தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு, விருப்பமான மதத்தை பின்பற்ற, தமக்கான கலாசாரத்தில் வாழ்வதற்கு ஏற்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.

அனைத்து இனங்களின் கருத்துக்களையும் உள்வாங்கி நாட்டில் ஒருமித்த நிலைமையை கட்டியெழுப்புவதற்கு பெரும்பாலான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.

மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிட்டுள்ளது. அதனால் தொடர்ச்சியாக தோல்வியையே சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

உங்கள் கட்சிக்கான கடந்த தேர்தல் முடிவுகளை பாருங்கள். அடுத்தமுறை இதுவும் இல்லாது போகும் நிலைமையே ஏற்படும். மக்கள் மத்தியில் மாற்று கருத்துகளை திணிப்பதற்கு அல்லது தூண்டுவதற்கு நீங்கள் முற்பட்ட காலமொன்று இருந்தது.

அதற்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்க போவதில்லை. மேலும், மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை. மாகாணசபை முறைமையை உங்களுக்கு பெற்றுக்கொடுத்தோம் ஆனால் உங்களால் பணத்தை பெற்றுக்கொள்ள முடிந்தது.வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை.

பிரதேச சபைகளும் அவ்வாறுதான் உள்ளது. மக்களுக்கு சேவையாற்றாது வெறுமனே நாடாளுமன்றத்தை கதைக்களமாக மாத்திரம் பாவித்து பொய்கூறி செல்வது அர்த்தமற்றது. நாட்டில் பங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்கும் இராணுவம் என இரண்டு தரப்பு மாத்திரமே உள்ளன.

அதன்படியே இராணுவம் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்துள்ளது. அவ்வாறு இல்லாது நாட்டை கொண்டுசெல்ல முடியாது. ஆகையால் தேவையற்ற காரணிகளுக்கு முன்னின்று உயிர்நீத்த மக்கள் தொடர்பில் நாம் கவலையடைகின்றோம்.

அத்துடன், அவ்வாறு செல்வதற்கு வழிநடத்திய தரப்பு தொடர்பில் நாம் எதிர்ப்பில் உள்ளோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!