பிரித்தானியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ள ஐரோப்பிய நாடுகள்: வெளியான காரணம்!

பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் இதுவரை 20 லட்சம் பேருக்கு மேலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 ஆயிரம் பேர் இந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் பரவலை தடுக்கும் வகையில், நாட்டில் கடந்த வாரம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதல் வாரத்தில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டது. இதனால், பிரித்தானியாவில் கொரோனா விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த சில நாட்களாக பிரித்தானியாவில் கொரோனா பரவல் வேகம் புதிய உச்சத்தை தொட்டது. தினமும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் வைரஸ் இந்த அளவிற்கு வேகமாக பரவ என்ன காரணம் என்பது குறித்து பிரித்தானிய ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில், தற்போதைய கொரோனா வைரஸ் முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமாதாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது கொரோனா வைரஸ் சூழ்நிலைக்கு ஏற்றார்போல வளர்சிதை மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய வைரசின் பாதிப்பு சக்தியை கொண்டிருந்த போதும் அதன் பரவும் வேகம் மிகவும் அதிக அளவில் இருந்தது.

அதாவது, பழைய கொரோனா வைரசை காட்டிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதாக உள்ளது.

கொரோனா வைரஸ் வளர்சிதை மாற்றம் அடைந்து புதியவகை கொரோனா வைரசாக மாற்றமடைந்து வேகமாக பரவி வருவதால் ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகள் பிரித்தானியாவுடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

இந்த தடை இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.

மேலும், வேகமாகப் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்து விவாதிக்க அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அதன் கூட்டு கண்காணிப்புக் குழுவுடன் நாளை ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!