வடக்கு- கிழக்கில் வீடுகளை அமைக்கும் சீனா – சிறிலங்காவிடம் இந்தியா கவலை

வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிறிலங்காவில் வீடுகளை அமைத்திராத சீன நிறுவனதுடன்,, கேள்விப் பத்திரம் எதுவும் கோரப்படாமல், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறித்து சிறிலங்காவின் உயர் மட்டத்துக்கு இந்தியா கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

சீன ரயில்வே பெய்ஜிங் பொறியியல் குழும நிறுவனத்தின் சிறிலங்கா பிரதிநிதியான, யப்கா கட்டுமான நிறுவனத்துக்கு, 40 ஆயிரம் வீடுகளை வடக்கு, கிழக்கில் அமைக்கும் திட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பை ஒப்படைக்கும், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு கடந்த மாதம் அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.

மண் சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை கட்டும், ஒப்பந்தமும், இந்த நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, வடக்கு கிழக்கில் சீன தொழிலாளர்களின் பரம்பல் அதிகரிக்கக் கூடிய நிலையில், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசாங்கம் கேள்விகளை எழுப்பியுள்ளதாக அறியப்படுகிறது.

சிறிலங்காவில் இந்த நிறுவனம் இன்னமும் ஒரு வீட்டைக் கூடக் கட்டியிருக்காத நிலையிலும், குறித்த பிரதேசத்துடன் எந்த பரிச்சயமும் இல்லாத நிலையிலும், அதற்கு வீடுகளை அமைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், காலநிலை மற்றும் மண் தொடர்பான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாமல் இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளமை குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!