ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியை உருவாக்கம் : திஸ்ஸ அத்தநாயக்க!

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு, 10 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கின்றார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“பரந்த அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதே எமது அடுத்த பிரதான நோக்கமாகும்.

தற்போதும் பல்வேறு நட்புக் கட்சிகள் எம்மோடு இணைந்துள்ளன. அவற்றுக்கு மேலதிகமாக எமது புதிய கூட்டணிக்கு வேறு கட்சிகள் மற்றும் அமைப்புக்களையும் ஒன்றிணைக்க எதிர்பார்க்கின்றோம்.

எமது ஐக்கிய கூட்டணிக்காக தற்போது யாப்பொன்றையும் சட்டமூலத்தையும் உருவாக்கியுள்ளோம். அவற்றை எமது நட்புக் கட்சிகளுக்கு அனுப்பிவைத்துள்ளோம்.

எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் கலந்துரையாடி மிக விரைவில் புதிய கூட்டணிக்கான நடவடிக்கைகளை நிறைவு செய்யவுள்ளோம்.இதற்காக ஏனைய அரசியற் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் கலந்துரையாட நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் போது, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவொன்றை அமைக்கமாறு ஆலோசனை வழங்கினார்”என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!