பிரித்தானியாவின் செயலால் கடும் கோபத்தில் இருக்கும் சீனா!

பிரித்தானியா அதன் மிகப்பபெரிய போர் கப்பலான HMS குயின் எலிசபெத்தை சீனாவின் தெற்கு கடல் பகுதிக்கு அனுப்பியுள்ள நிலையில், சீனா அதன் ‘இறையாண்மையை பாதுகாத்துக்கொள்ள தேவையான எந்த நடவடிக்கையையும் எடுக்கும்’ என பிரித்தானியா மற்றும் பிற மேற்கத்திய வல்லரசுகளை எச்சரித்துள்ளது.

சீனா, தைவான், புருனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் தென்சீனக் கடலின் சில பகுதிகளுக்கு உரிமை கோருகின்றன, மேலும் பல சக்தி வாய்ந்த நாடுகள் இப்பகுதியின் கப்பல் பாதைகளைப் பராமரிக்க ஆர்வம் காட்டுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் 3.4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய வர்த்தகம் இந்த கடல் வழியாக செல்கிறது, இது உலகளாவிய கடல் வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. மேலும், இப்பகுதியில் பெரும் மீன் வளம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் பெரிய இருப்புக்களும் உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று, ஹாங்காங்கில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குதல் மற்றும் தென்சீனக் கடல் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பாக கடந்த ஆண்டு சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்தன. சர்ச்சைக்குரிய இந்தக் கடற்பகுதியில் இராணுவ தளங்களை நிர்மாணிப்பது குறித்து சீனா சர்வதேச கண்டனங்களை பெற்றது.

இதற்கிடையில், சீனா இப்பகுதிக்கு உரிமை கோருவதை எதிர்த்து சவால் விடும் விதமாக அமெரிக்கா அடிக்கடி அதன் கப்பல்களை அவ்வழியே அனுப்பிக்கொண்டிருந்தது.

இப்பொது பிரித்தானியாவின் மிக பெரிய போர்க்கப்பலும் அப்பகுதிக்கு பயணிக்கவுள்ளது.

HMS குயின் எலிசபெத் கப்பல் ஜப்பானின் ரியுக்யு தீவுகளுக்கு அருகிலுள்ள அமெரிக்க மற்றும் ஜப்பானிய கடற்படைப் படைகளுடன் சில மாதங்களில் இணைந்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தென் சீனக் கடல் ” ஆயுதங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் ஆதிக்கம் செலுத்தும் பெரும் சக்தி கொண்ட கடலாக மாறக்கூடாது” என்றும் “சீன இராணுவம் அதன் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு ஆர்வம் மற்றும் தென்சீனக் கடலில் அமைதியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்” என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!