வவுனியா முடக்கப்படுமா? : அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்..

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப்பரவல் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு பிரதேச செயலர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், சுகாதாரத்துறையினர், பாதுகாப்புப் படையினர் மற்றும் காவற்துறையினர் எனச் சகல தரப்பினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி , தாண்டிக்குளம் சந்தி ,மாமடுவ சந்தி ,பூந்தோட்டம் சந்தி
கண்டி வீதி இராணுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் பாதுகாப்பு பிரிவினர் மூலம் போக்குவரத்து கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் செல்வற்கு அனுமதி மறுக்கப்படுவதுடன் அரச உத்தியோகத்தர்கள் அடையாள அட்டையினை பாதுகாப்பு பிரிவினருக்கு அடையாளப்படுத்தி கடமைகளுக்கு செல்ல முடியும் எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து தாண்டிக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து வன்னி இராணுவ முகாம் வரையும் , வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து மாமடுவ சந்தி வரையிலுமான பகுதிகள் முடக்கப்படுகின்றது.

மேலும், மக்கள் வெளிச்செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டு மக்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தனிமைப்படுப்படும் பகுதிகளுடாக நகருக்குள் பிரவேசிக்கும் தனியார் , இ.போ.ச பேரூந்துகள் நகரின் எப்பகுதியிலும் தரித்து நிற்பதற்கு தடை விதிக்கப்படுவதுடன் வைத்தியசாலைக்கு அருகேயுள்ள பேரூந்து தரிப்பிடத்தில் மாத்திரம் பேரூந்துகளை நிறுத்த முடியும் எனவும் குறித்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முடக்கப்படும் பகுதிகளில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையினையும் அமுல்படுத்தவுள்ளதாகவும் குறித்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றையதினம் ஒரே நாளில் 51 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்படவேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் 27 பேருக்கும், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் 24 பேருக்கும் என வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 51பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வவுனியா மாவட்டத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்கவும், சுயதனிமைப்படுத்தலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தை முடக்குவது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!