ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிசிர டி அப்ரு, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சட்டமா அதிபரினால் தொடப்பட்டுள்ள குறித்த வழக்கில், ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, நீதியரசர் சிசிர டி அப்ரு சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த நிலையிலேயே, மூன்று பேர் அடங்கிய குறித்த நீதியரசர்கள் குழாமினால், நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்தொன்றை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ஓய்வுபெற்ற சிரேஷ்ட விமானப் படை அதிகாரி சுனில் பெரேராவினால், உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது

இந்தப் பின்னணயில், குறித்த முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு, ரஞ்சன் ராமநாயக்கவை பிரதிவாதியாக குறிப்பிட்டு, சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையிலேயே, குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!