கொரோனா தொற்று: சீனாவின் முக்கிய மாகாணத்தில் திடீரென அவசர நிலை பிரகடனம்!

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் அவசர நிலையால் 3.7 கோடி மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர்.இதனிடையே தலைநகர் பீஜிங் அருகே அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினூடே மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

சுமார் 7.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஹூபே மாகாணம், சமீபத்தில் உருமாறியுள்ள புதிய வீரியம் மிக்க கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. 2019-ல் வுஹான் நகரில் கொரோனா பரவல் கண்டறிந்ததன் பின்னர் சீனா கடுமையான ஊரடங்கு விதிகளை அமுலுக்கு கொண்டு வந்து, பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா பெருந்தொற்றை விரைந்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இருப்பினும் நாட்டின் வடக்கு பிராந்தியங்களில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் இப்போதும் ஒருவித ஊரடங்கு விதிகளின் கீழ் உள்ளனர். ஹைலோங்ஜியாங் மாகாணத்தை பொறுத்தமட்டில் புதன்கிழமை மட்டும் 28 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது,அதில் 12 பேர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனையடுத்தே மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்களை வீட்டில் இருந்து வெளியே அனுமதிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!