வெட்டுப் புள்ளிக்கு எதிர்ப்பு!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி, எந்தச் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, எவ்வாறு தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்பதில் பெரும் சிக்கல் காணப்படுவதாகத் தெரிவித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன, ஒருசில பாடசாலைகளைத் தரமுயர்த்தும் வகையில் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுகின்றன. இவற்றில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு தொடக்கம், 2020ஆம் ஆண்டு வரை புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி எந்த நிர்ணயத்தன்மை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறித்து, கல்வி அமைச்சுக்கு அமைச்சரவை ஊடாக யோசனையை முன்வைக்கவுள்ளேன் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் அவ்வறிக்கையில், வெறெந்த நாடுகளிலும் இல்லாத வகையில், இலங்கையில் மூன்று பிரதான பரீட்சைகளில் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறும் மாணவர்கள், பரீட்சையில் சித்தியடைந்ததாகச் சான்றிதழ் வழங்கியுள்ளேன். இருப்பினும் புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்கள், உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!