14 நாடுகளில் பரவியுள்ள 3 புதிய கொரோனா வைரஸ்களால் அச்சுறுத்தல்

14 நாடுகளில் பரவியுள்ள புதிய கொரோனா வைரஸ்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா.சபையுடன் இணைந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் உருவாகி ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அதன் உருமாறி வருகிறது. உருமாறுகிற புதிய கொரோனா வைரஸ்கள் பல நாடுகளில் பரவி வருகின்றன.

சமீபத்தில் இங்கிலாந்தில் தோன்றிய உருமாறிய வைரஸ், சீனாவில் முதலில் உருவாகி உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ்களை விட வேகமாக பரவுகிற தன்மையை கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், தற்போது உருமாறிய 3 கொரோனா வைரஸ்கள், 14 மேற்கு அரைக்கோள நாடுகளில் பரவியுள்ளதாகவும், அவற்றின் தொற்று மற்றும் தீவிர தன்மை அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்றும் ஐ.நா. சபையின் அங்கமான பாஹோ என்று அழைக்கப்படுகிற பான் அமெரிக்க சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த 3 வைரஸ்களில் ஒன்றுதான், இங்கிலாந்து நாட்டிலும், தென் ஆப்பிரிக்காவிலும் காணப்பட்ட வைரஸ் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இதையொட்டி, பான் அமெரிக்க சுகாதார அமைப்பின் நிகழ்வு மேலாளர் சில்வைன் ஆல்டிகேரி கூறும்போது, “இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட 2 வகை வைரஸ்கள், அமெரிக்காவின் பிராந்தியத்தில் சமூக பரவலை ஏற்படுத்தியதாக தெரியவில்லை. இதுவரை அந்த இரு நாடுகளில் இருந்தோ அல்லது அந்த நாடுகளுக்கோ பயணிக்கும் நபர்களிடம் இருந்து மட்டுமே அந்த வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது” என குறிப்பிட்டார்.

மூன்றாவது வகை வைரஸ், பிரேசில் நாட்டின் அமேசோனாஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இது உள்நாட்டில் பரவலாக இருக்கிறது. அங்குள்ள மானுஸ் நகரில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள பலருக்கு அந்த வைரஸ் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

சீனாவில் இருந்து வந்த அசல் கொரோனா வைரசை விட இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா அதிக மரண ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் பான் அமெரிக்க சுகாதார அமைப்பு கூறுகிறது. இவ்விரு வைரஸ்களும் அதிகமாக பரவுகிற நிலை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் அமெரிக்காவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள மாடர்னா மற்றும் பைசர் பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசிகள், இந்த இரு வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன என்று அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.

எதிர்கால பிறழ்வுகளுக்காக தேவையான கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிகளை இந்த நிறுவனங்கள் உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!