தொல்பொருள் செயலணியில் புதிதாக 5 சிங்களவர்கள்!

கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணியில் சிறுபான்மையினரையும் நியமிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த செயலணிக்கு மேலும் 5 சிங்கள உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மூத்த பேராசிரியர் அனுர மானதுங்க, காணி ஆணையர் நாயகம் கீர்த்தி கமகே, சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஆர்.டி.நந்தனா சேனதீர மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அசின்சல சேனவிரத்ன ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் செயலணியில் அங்கம் வகித்த ஐந்து உறுப்பினர்களில் சிலர் ஓய்வுபெற்றமை மற்றும் இடமாற்றம் பெற்றதால் புதிய நியமனங்கள் நடைமுறைக்கு வருவதாக வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் ஜனாதிபதி செயலணி, 2020 ஜூன் 1ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது. இதில் தமிழ் மற்றும் முஸ்லிம்களை இணைக்கும்படி பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதனால் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் பெயர் பட்டியலொன்றை சமர்ப்பித்திருந்தனர். அந்த பட்டியல் குறித்து அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!