வடக்கில் நேற்று 12 பேருக்கு தொற்று – 10 பேர் பூநகரி வாசிகள்.

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் பூநகரியைச் சேர்ந்தவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 379 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5 பேர் வவுனியா வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 10 பேர் பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட வலைப்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த வாரம் கண்டறியப்பட்டது. அவருடைய நெருங்கிய உறவினர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கும் வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!