அலி சப்ரி அடிப்படைவாத முஸ்லிம்கள் சார்பிலேயே செயற்படுவதாக அத்துரலிய ரதன தேரர் குற்றச்சாட்டு!

நீதியமைச்சர் அலி சப்ரி, அடிப்படைவாத முஸ்லிம்கள் சார்பிலேயே செயற்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் குற்றஞ்சாட்டுகின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் நடைமுறைத்தப்படுகின்ற முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேணையொன்று கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனில், நாட்டில் உள்ள ஏனைய தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

இதன்படி, குறித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதியமைச்சர் இவ்வாறான கீழ்த்தரமான கருத்துக்களை வெளியிடாது இருந்தால், மிகவும் சிறந்தது. மிகவும் சட்டபூர்வ மற்றும் பொறுப்புவாய்ந்த ஒரு உரையே ஆற்றியிருந்தேன். நாட்டின் சம்பிரதாய அரசியலமைப்பின் சட்டம் மீறப்படுகின்றது எனவும், மனித உரிமை மீறப்படுகின்றது எனவும் நான் கூறினேன்.

நான் கூறிய கருத்துக்களின் பாரதூரமான விடயங்களுக்கு பொறுப்பாக பதில் வழங்குவதை விடுத்து, நான் இனவாதத்தையும், மதவாதத்தையும் ஏற்படுத்துவதாக அவர் கூறியமை தொடர்பில், நான் கவலையடைகின்றேன். அலி சப்ரி நாட்டின் நீதியமைச்சர் கிடையாது. நாட்டில் நூற்றுக்கு 3 வீதம் வரை உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்காகவே அவர் செயற்படுகின்றார் என்பதை நாம் இந்த இடத்தில் கூறிக் கொள்கின்றேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!