இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஆதிக்க சக்திகள் குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும்: தினேஷ் கருத்து!

எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது, இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தை முன்வைக்க விரும்புவதாக, பல்வேறு நாடுகள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியா, ஜேர்மன், கனடா, மலாவி, வடக்கு மெசிடோனியா மற்றும் Montenegro ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உள்ளடக்கிய அமைதிக்கான தமது உறுப்பாட்டை தாம் வெளிப்படுத்துவதாக, குறித்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை, மக்களின் காணிகளை மீள கையளித்தல் மற்றும் இடம் பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாகவும் குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், போர் குற்றங்களை நிவர்த்தி செய்தல் மற்றும் நாட்டில் அமைதியான சூழலொன்றை கட்டியெழுப்புவது, தற்போது தேவையாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பரிசீலிக்கும் எனவும் குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இறுதிக்கட்ட போரில் ஏதேனும் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுக் கொடுத்து குற்றவாளிகளை தண்டிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்காகவே ஜனாதிபதியினால் உயர் நீதிமன்ற நீதியரசரொருவர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதற்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கொண்டுவரப்பட்ட 30 இன் கீழ் 01 தீர்மானம் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக அமைந்துள்ளதாகவும் வௌியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் பயங்கரவாத் தோற்கடிக்கப்பட்டமை முதல் இலங்கை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் பின்னால் இருக்கும் ஆதிக்க சக்திகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கோரியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!