பிரித்தானிய ராஜ குடும்பத்தில் வளர்ந்த இந்திய குழந்தை: வெளியான ஆச்சரிய தகவல்!

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் வெள்ளையரல்லாத முதல் பெண், ஹரியின் மனைவி மேகன் அல்ல, ஏற்கனவே மகாராணியார் இந்திய குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்தார் என ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இப்போது மகாராணியாராக இருக்கும் எலிசபெத் மகாராணியாரின் மூதாதையரான விக்டோரியா மகாராணியார், ஒரு இந்திய குழந்தையை தத்தெடுத்து வளர்த்தாராம்!

இப்போது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் குடகு மலைப் பிரதேசங்களை, 1633 முதல் 1834 முடிய 200 ஆண்டுகள் வரை, ஹலேரி மன்னர்கள் ஆண்டார்கள்.

குடகு இராச்சியத்தின் இறுதி மன்னர் சிக்க வீர ராஜேந்திரனுக்கு ஆண் வாரிசுகள் இல்லாததால், குடகு இராச்சியம் பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றிய தனது சொத்துக்களை மீட்பதற்காக, 1852ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றார் மன்னர் வீர ராஜேந்திரன்.

அப்போது தன்னுடன் தன் மகளான கௌரம்மாவையும் அழைத்துச் சென்றார் வீர ராஜேந்திரன். வீர ராஜேந்திரனை ராஜ மரியாதையுடன் வரவேற்ற விக்டோரியா மகாராணியாரிடம், தனது மகள் கௌரம்மாவை தத்தெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் அவர். அப்போது கௌரம்மாவுக்கு 11 வயது.

ஏற்கனவே மகாராணியார் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவந்தார்.

ஆகவே, அவர் கௌரம்மாவையும் தத்தெடுத்துக்கொண்டார். ஆனால், கௌரம்மாவால் இந்த திடீர் புகழை சமாளிக்க முடியவில்லை.

ராஜ குடும்பத்தின் அழுத்தங்களை தாங்க இயலாமல் பல முறை அரண்மனையிலிருந்து தப்பியோட முயன்றார் கௌரம்மா.

இந்த விடயங்களை வெளியிட்டுள்ள வரலாற்றாளரான Dr பிரியா அத்வால், கௌரம்மாவை ஹரியின் மனைவியான மேகனுடன் ஒப்பிடுகிறார்.

தான் கர்ப்பமாக இருந்தபோது ராஜ குடும்பத்தின் அழுத்தம் தாங்க இயலாமல் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாக மேகன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கௌரம்மாவைப் பொருத்தவரை, பின்னாட்களில் ஆங்கிலேயர் ஒருவரை மணந்துகொண்டார். அவரது வாரிசான மகன் ஒருவர் இறந்துபோனாலும், அவரது மகள்கள் இருவர் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்ததாகவும், அவரது தலைமுறையினர் இன்னமும் அவுஸ்திரேலியாவில் வாழ்வதாகவும் கருதப்படுகிறது.

ஆக, மேகன் சொன்னதுபோல, பிரித்தானிய ராஜ குடும்பத்துக்குள் வந்த முதல் வெள்ளையரால்லாத பெண் மேகன் அல்ல என்கிறார் Dr பிரியா அத்வால். Dr பிரியா அத்வாலின் இந்த செய்திக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!