இலங்கையர்களுக்கு செலுத்தப்பட போகும் Sputnik V கொரோனா தடுப்பூசி..!

ரஷ்யாவிடம் இருந்து Sputnik V கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியினை இலங்கை சினேகபூர்வமாக பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரும், கொரோனா தடுப்பூசிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

Sputnik V கொரோனா தடுப்பூசிக்கு தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அனுமதி அளித்துள்ள நிலையில், அதன் முதல் தொகுதி விரைவில் பெற்றுக்கொள்ளப்படுமென கொரோனா தடுப்பூசிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ரஷ்யாவிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான உதவி கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சீனாவிடம் இருந்தும் ஒருதொகுதி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரும், கொரோனா தடுப்பூசிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, Oxford AstraZeneca கொரோனா தடுப்பூசிக்கு பின்னர் இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!