நாட்டில் கொரோனா தொற்றின் தற்போதைய முழு நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 307 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 275 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 7 பேரும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 25 பேரும் இவ்வாறு கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 83 ஆயிரத்து 358 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 395 பேர் குணமடைந்த நிலையில் நேற்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 648 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 2 ஆயிரத்து 732 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 609 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி வெலிகம பிரதேசத்தை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரே கொரோனா தொற்று காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 527 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 422 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுள் 14 பேருக்கு நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்

இதற்கமைய யாழ்ப்பாண சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் உட்பட சிறைச்சாலை கைதிகள் 7 பேர் மற்றும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐவர் தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

ஏனையவர் வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலை பணியாளர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!