தேர்தல்களில் வென்றாலும் தோற்றாலும் சமூகப் பணி தொடரும்!

மக்கள் சேவை எனக்கூறி சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரம் ஒரு கேள்வி பதிலில், ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் கட்சிப் பதிவு பெற்றதாகப் பத்திரிகையில் செய்தி படித்தேன். உங்கள் கட்சி மற்றக் கட்சிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?” என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள சி.வி.விக்கேஸ்வரன் , “எமது கட்சி இன்னமும் பதிவு பெறவில்லை. பதிவு பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

எமது தமிழ் மக்கள் கூட்டணியில் நாங்கள் எவருமே பாரிய புத்திசாலிகள், கெட்டிக்காரர்கள், திறமைசாலிகள் என்று பெயர் எடுத்தவர்கள் அல்லர். நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள். அரசியலுக்குப் புதியவர்கள்.

எங்களுக்கிருக்கும் ஒரேயொரு பொதுக் குணாதிசயம், நாங்கள் எங்கள் மக்கள் மீது அன்பு கொண்டிருக்கின்றோம் என்பதாகும். அந்த அன்புதான் எங்கள் பலம். ஒரு மானிடரின் வாழ்வைப் பரிசீலித்துப் பார்த்தீர்களானால் அவரின் சிந்தனையில் இருந்து சித்தாந்தம் வரையிலான அவரின் வாழ்வுமுறையே வாழ்க்கை என்று குறிப்பிடப்படுகின்றது.

சிந்தனையில் இருந்து பிறப்பது சொல். சொல்லில் இருந்து பிறப்பது செயல். ஒருவரின் சிந்தனை, சொல் மற்றும் செயல்களின் வாயிலாக அவர் பிரதிபலிப்பதுதான் அவரின் சித்தாந்தம். இதிலே வழி நெடுகலும் தூய்மை வேண்டும். சிந்தனையில் தூய்மை, சொல்லில் தூய்மை, செயலில் தூய்மை என வாழ்ந்தால் எமது சித்தாந்தமும் தூய்மை பெறும். அதை விட்டு அசிங்கமான சிந்தனைகளோ, சொற்களோ அல்லது செயல்களோ எம்மைப் பீடித்துக் கொண்டால் எமது வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும்.

அரசியல் என்பது குறிக்கோள்களைக் கொண்டது. ஆகவே, சித்தாந்தத்தை மையமாக வைத்தே அரசியல் நடைபெறுகின்றது, நடைபெற வேண்டும். எமது கட்சியின் சித்தாந்தம் என்ன என்று கேட்டால் மக்கள் சேவையாகும். எல்லோரும் மக்கள் சேவை செய்கின்றோம் என்று தானே கூறுகின்றார்கள் என்று கேள்வி கேட்பீர்கள். இங்குதான் தூய்மை என்பது அவசியம். மக்கள் சேவை எனக்கூறி சுயநல அபிவிருத்தியே குறிக்கோளாக இருப்பவர்களின் சித்தாந்தம் தூய்மையற்றது.

நோக்கிச் சென்றால் அவர்கள் செயலில் தூய்மை இருக்காது, சொல்லில் தூய்மை இருக்காது, சிந்தனையில் தூய்மை இருக்காது. சுயநலமே எல்லாவற்றையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும். ஆகவே, மிகச் சாதாரண மக்களாகிய எங்கள் கட்சி அங்கத்தவர்கள் அன்புக்கும் தூய்மைக்கும் முதலிடம் கொடுப்பவர்கள். தங்கள் மக்கள் மீது அதீத அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள். நெஞ்சிலே தூய்மையைச் சுமந்து செல்பவர்கள்.

இந்தத் தூய்மையின் வெளிப்பாடாகவே நாம், எமது தேர்தல் செலவுகள் பற்றிய முழுமையான கணக்கறிக்கையை மக்கள் முன்பு வைத்தோம். அரசியலுக்காக எம்மீது பொய்யான குற்றங்களைச் சுமத்துபவர்கள் மீது நாம் கோபம் கொள்வதில்லை. பரிதாபப்படுகின்றோம். உண்மை என்பது ஆயிரம் பொய்களுக்கு மத்தியிலும் தனித்து ஜொலிக்கக் கூடியது.

இந்த இடத்தில் இருந்து மேலும் சற்று முன்னோக்கிச் செல்ல விரும்புகின்றேன். எமது அரசியல் சித்தாந்தம் தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு என்று அறிந்திருப்பீர்கள். அதனை மையமாக வைத்து எமது கட்சி பயணிக்கின்றது. எம்மை நாமே ஆள்வது சுயநிர்ணய உரிமை பாற்பட்டது. சுயநிர்ணய உரிமையை எங்கள் அரசியலில் முதனிலைப்படுத்தியுள்ளோம்.

எமது மக்கள் தங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நாங்கள். ஆகவே, பிச்சைப் பாத்திரம் ஏந்தாமல் எம்மை நாமே விருத்தி செய்து கொள்ள, அபிவிருத்தி அடைய, எம் மக்களை நாம் நாடி அவர்களுக்குத் தம்மீது நம்பிக்கை கொள்ளச் செய்து சமூக அபிவிருத்திக்கு அடிகோலுபவர்கள் நாங்கள். தேர்தல்களில் வென்றாலும் தோற்றாலும் சமூகப் பணி தொடர்ந்து கொண்டு தானிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!