பாரம்பரியங்களை உதறி விட்டு உதவி கேட்டு ரஸ்ய தூதரகம் சென்ற வெளியுறவு செயலாளர்!

அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு வெளிவிவகார செயலாளர் அட்மிரல் கொலம்பகே, ரஸ்ய தூதரகத்திற்கு நேரில் சென்று உதவி கோரியுள்ளார்.

கடந்த புதன்கிழமை வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே அனைத்து பாரம்பரியங்களையும் புறக்கணித்து விட்டு பௌத்தலோக மாவத்தையிலுள்ள நன்கு பாதுகாக்கப்பட்ட ரஸ்ய தூதுரகத்திற்கு சென்றார்.

அவருடன் வெளிவிவகார அமைச்சின் இன்னொரு அதிகாரியும் சென்றிருந்தார். இவர்கள் இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் யூரி மட்டேரியை சந்தித்தனர்.

முன்னைய சோவியத் யூனியனில் இடம்பெற்றிருந்த நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என ரஸ்யா பரப்புரை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்வதே இந்த சந்திப்பின் நோக்கம்.

உதவியை கோருவதற்காக இலங்கையின் வெளிவிவகார செயலாளர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவை.

அவசரதேவைகளின் போது குறிப்பிட்ட இராஜதந்திரியை வெளிவிவகார அமைச்சிற்கு அழைப்பதே பாரம்பரியமாக இதுவரை காணப்படுகின்றது.

இலங்கைக்கு அவசர தேவையிருந்திருந்தால் வெளிவிவகார கொள்கை மற்றும் வெளிவிவகார உறவுகளிற்கு பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்ட நாட்டின் இராஜதந்திரிக்கு அவ்வாறான அழைப்பை விடுத்திருக்க வேண்டும்.என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!