பொதுவேட்பாளராக களமிறங்க முயற்சிக்கிறார் விஜேதாஸ!

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கும் நோக்கத்துடனேயே நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ச, அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி,

“விஜேதாஸ ராஜபக்ச மிகுந்த சந்தர்ப்பவாதி. அவரது கனவு பொது வேட்பாளராக மாறுவது தான். விஜேதாஸவுக்கு இரண்டு பிரச்சினை. ஒன்று அமைச்சர் பதவி வழங்கப்படாமை, இரண்டாவது, பொதுவேட்பாளர் கனவு.

பஷில் ராஜபக்ஷ மீது அவர் காட்டமாக பேசியதற்கு காரணம், அவர் பொதுவேட்பாளராக மாறிவிடுவாரோ என்ற அச்சத்திலாகும். அதேபோன்றே கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற அச்சத்தில் தான் அவர் செயற்படுகிறார். விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இப்படித்தான் செயற்படுகின்றனர்.

20 ஆவது திருத்தம் செய்கையில், பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வரப்போவதாக தெரிவித்தே கருத்து வெளியிட்டனர். அப்படி நடந்ததா? இல்லை. அவர் தனது பெயரில் ராஜபக்ஷ என்ற பெயரினை இட்டுக்கொண்டமையும் எமக்கு தெரியும்.

உட்கட்சிக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை வீழ்த்த முயற்சிக்காமல், தயவுசெய்து எதிர்கட்சியிடம் இணைந்து விமர்சிக்கும்படி கோருகின்றோம்.

எதனையாவது கூறிவிட்டால் உடனே கர்தினால், மகாநாயக்க தேரர்களிடம் சென்று பேச்சு நடத்தி ஊடகங்களையும் அழைத்து பேசுகின்றனர். அந்த சந்தர்ப்பத்திற்காகவே நாடாளுமன்ற தெரிவுக்குழு இருக்கிறது. அங்கே வந்து குறைநிறைகளை கூறும்படி விஜேதாஸவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் வலியுறுத்துகின்றோம்.

உணர்ச்சிபூர்வமாக நாட்டு மக்களை குழப்பிவிட்டு வேடிக்கை பார்க்கவே முயற்சி இடம்பெறுகிறது என்றார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!