தமிழர்களின் இனவிகிதாசாரத்தைக் குறைக்கவே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை!

தமிழர்களுடைய இனவிகிதாசாரத்தை குறைப்பதற்காகத் தான் 1971 ம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டு அதன் வேலைகள் கிழக்கு மாகாணத்திலிருந்து தற்போது முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் அதற்கான செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்ச இங்கே செய்ய தவறிய விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்கள் 2020 ம் ஆண்டு நவம்பர் மாதம் அவருடைய அமைச்சு எம்முடைய கோரிக்கைக்கு அமைவாக மகாவலி தொடர்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அமைச்சருக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்து இருந்தார்கள்.

அதாவது, முல்லைத்தீவு மாவட்டத்திலே கரைதுறைபற்று பிரதேச சபை பிரிவில் இருக்கக்கூடிய கொக்குளாய் கிழக்கு, கொக்குளாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கருநாட்டுக்கேணி, செம்மலை கிழக்கு ஆகிய ஆறு பகுதிகளில் இருக்கக்கூடிய கிராம சேவையாளர் பிரிவுகளைப் பிரதேச செயலகத்தினுடைய நிர்வாகத்திலிருந்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எடுக்கின்ற அந்த முயற்சியை நிறுத்துமாறு நாங்கள் கேட்டிருந்தோம்.

அப்போது ஆளும் கட்சியை சார்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த கூட்டத்தில் இருந்தனர். அதற்கு அமைச்சர், நான் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வந்து இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து ஒரு நியாயமான தீர்வு தரும் மட்டும் எந்தவித நடவடிக்கைகளும் செய்யவேண்டாம் என மகாவலி பணிப்பாளருக்கு ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார், ஆனால் அதே செயற்பாடு இன்று நடைபெறுகிறது.

தமிழர்களுடைய இனவிகிதாசாரத்தை குறைப்பதற்காகத் தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டு அதன் வேலைகள் கிழக்கு மாகாணத்திலிருந்து தற்போது முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் அதற்கான செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!