பயணத்தடை தொடர்பான முழுமையான விபரங்கள்

நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 11 மணி முதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டின் போது தனிநபர் நடமாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் 3 தினங்களில் பதிவு திருமணங்களை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

இதற்கமைய முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை களியாட்டங்கள், விருந்து உபசாரங்கள் நடத்துவதனை தவிர்த்து பதிவு திருமணங்களை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் பதிவு திருமணத்திற்கு 15 பேர் வரை மாத்திரமே அழைக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் திருமணங்கள் நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே மருந்தகங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் குறித்த காலப்பகுதியில் முடப்பட்டுள்ளன

குறித்த மூன்று தினங்களிலும் புகையிரத சேவை, மற்றும் பயணிகள் பேருந்து சேவை ,முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாடகை போக்குவரத்து சேவைகள் என்பனவற்றுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திட்டமிடப்பட்ட ரயில் சேவைகள் உட்பட பஸ் சேவைகள் என்பன எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் வழமையான முறையில் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பேலியாகொடை மீன் சந்தை, மற்றும் பொருளாதார மத்திய நிலையங்கள் ஆகியவற்றில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே உணவகங்களில் பொதிசேவைகளை உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுமதியுடன் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாடகை போக்குவரத்து சேவைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நபர் ஒருவர் சுகயீனமடையும் பட்சத்தில் வாடகை வாகனம் அல்லது சொந்த வாகனங்களில் மருத்துவமனைக்கு பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுபவர்கள் .ஏற்றுமதி மற்றும் முதலீட்டு சபை ஊழியர்கள் சுகாதாரம், நீர், மின்சாரம், தொடர்பாடல், ஊடகத்துறை, துறைமுகம், விமான நிலையம், தனியார் பாதுகாப்பு சேவை, ஆகிய துறைகளில் பணியாற்றபவர்கள் அலுவலக அடையாள அட்டையினை காண்பித்து பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் விவசாயம் , உணவு உற்பத்தியில் ஈடுபடுவோரும் தங்களது பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய காரணங்களுக்காக பொது இடங்களில் நடமாடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

எவ்வாறாயினும் பயணக்கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ள போதிலும் சுகாதார விதிமுறைகளுக்கமைய ஆடைத்தொழிற்சாலைகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணிமுதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

இதன்படி சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!