மன்னகுளத்தில் மற்றொரு பௌத்த விகாரை

வவுனியா வடக்கு மன்னகுளம் பகுதியில் பெளத்த வழிபாடு இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளதாக தொல்லியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. பழைய செங்கல் இடிபாடுகளுடன் கூடிய பௌத்த வழிபாட்டு அடையாளங்கள் குறித்த பகுதியில் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா வடக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்டப்பட்ட 255-B கிராம அலுவலர் பிரிவில் மன்னகுளம் பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் கொண்ட தளமொன்று உள்ளதாக சிங்க ரெஜிமென்டின் 16ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.

இதையடுத்து, வவுனியா தொல்பொருள் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த பகுதியில் 60-70 சென்றிமீற்றர் உயரத்திற்கு இடைப்பட்ட 12 கற் தூண்களைக் கொண்ட கட்டட அமைப்பும் இருப்பதாகவும் அதில், சிங்கள எழுத்துக்களால் பூசை தொடர்பாக எழுதப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், இந்த தொல்பொருள் அடையாளம் கி.மு எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு உரியது எனவும், அங்கு பழைய கட்டடங்களுக்கான செங்கல், ஒடுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள குறித்த திணைக்களத்தினர், இக்கட்டடம் 50 சதுரமீற்றர் பரப்பளவைக் கொண்டதாக இருந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியா வடக்கில் வெடுக்குநாறி மலை, கோடலிபறிச்சான் பகுதியைச் தாெடர்ந்து தற்போது, மன்னகுளம் பகுதியையும் தாெல்லியல் திணைக்களத்தினர் உரிமை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!