மெக்சிகோவில் துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி – போதைப்பொருள் கடத்தல் கும்பல் வெறிச்செயல்

உலகிலேயே அதிக அளவில் மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் நடக்கின்றன. அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் ஆயுதமேந்திய போதைப்பொருள் கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொழில் போட்டி காரணமாக இந்த போதைப்பொருள் கும்பல்கள் அடிக்கடி மோதிக்கொள்வதால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகேன் மாகாணத்தின் ஜிதாகுவாரோ நகரில் வேன் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வேனை சோதனை செய்தபோது வேனுக்குள் ஒரு பெண் உள்பட 9 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் 9 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மிச்சோகேன் மாகாணத்தை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று தொழில் போட்டி காரணமாக இந்த 9 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்று, உடல்களை வேனில் வைத்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது.‌

இதுகுறித்து மிச்சோகேன் மாகாண போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!