எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஐந்து உப குழுக்கள் நியமனம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கான நட்ட ஈட்டைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆகிய செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஐந்து உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அமைச்சர்களான அலி சப்ரி, அமைச்சர் ரோஹித அபே குணவர்தன, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா ஆகியோர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக, காப்புறுதி உப குழு, சட்ட உப குழு, மீன்பிடி உப குழு, சுற்றுச்சூழல் உப குழு மற்றும் பொருளாதார உப குழு ஆகிய 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்க விரும்பும் தரப்பினர் எதிர்வரும் ஜுலை 2 ஆம் திகதி வரை தமது பரிந்துரைகளை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 011 244 544 7 எனும் தொலைநகல் இலக்கம் அல்லது reforms@moj.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தமது பரிந்துரைகளை அனுப்ப முடியும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!