ரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு… வழக்கிலிருந்து நீதியரசர் நவாஸும் விலகினார்!

முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர், தம்மை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிஐடியினர் தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்டஈடு பெற்றுத் தரக்கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ள வழக்கின் பரிசீலனைகளிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஒவ்வொருவராக விலகி வருகின்றனர்.

அதன்படி இவ்வழக்கு விசாரணைகளிலுருந்து ஒதுங்கிக் கொள்வதாக நீதியர்சர் ஏ.எச்.எம்.ஏ நவாஸ் அறிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த மனுக்கள் மீதான பரிசீலனைகளிலிருந்து தான் விலகுவதாக குறித்த மனு மீதான பரிசீலனைகள் இடம்பெற்றபோது, நீதியரசர் நவாஸ் அறிவித்தார்.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் இருந்து விலகும் மூன்றாவது நீதியரசர் நவாஸ் ஆவார். ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவரக செயற்பட்ட தான், மனுதாரர்கள் இருவர் குறித்தும் அந்த ஆணைக்குழுவில் சாட்சிகளை செவிமடுத்துள்ளதாக குறிப்பிட்டு, அதனடிப்படையில் இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக நீதியரசர் ஜனக் டி சில்வா கடந்த மே 28 ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தனிப்பட்ட காரணிகள் என தெரிவித்து நீதியர்சர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட கடந்த ஜூன் 4 ஆம் திகதி மனு மீதான பரிசீலனைகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையிலேயே நீதியரசர் நவாஸ் விலகியுள்ளார்.

அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆவது உறுப்புரைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக, ரிஷாத் பதியுதீன், ரியாஜ் பதியுதீன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றில் நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சுரசேன, ஏ.எச்.எம். நவாஸ், அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன் பரிசீலனைக்கு வந்தது. இதன்போதே, இம்மனுக்கள் மீதான பரிசீலனைகளில் இருந்து விலகுவதாக திறந்த மன்றில் நீதியரசர் நவாஸ் அறிவித்தார்.

இதனையடுத்து குறித்த மனுக்களை அவசர நிலை மனுக்களாக கருதி எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி மீள பரிசீலனைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!