ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு நான் பொலிஸாரை அழைக்கவில்லை – மங்கள தெரிவித்துள்ள விடயம்

நான் அமைச்சராக பதவி வகித்த காலப் பகுதியில் தினமும் அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு நான் பொலிஸாரை அழைக்கவில்லை என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாறாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தியதாகவும், அவர்களுடைய சில கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும்,

நான் நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அநேகமாக நாளாந்தம் எனது அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களைக் கலைப்பதற்கு நான் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கவில்லை.

மாறாக போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் வரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சில் ஈடுபட்டோம். சில சந்தர்ப்பங்களில் அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக கூட இருக்கலாம்.

ஆனால், கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குமான அவர்களின் உரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்.

கட்டாய சுயதனிமைப்படுத்தல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததும் சட்டத்துக்கு முரணானதுமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.