எதிர்க்கட்சியின் இறுதி இலக்கு அரசாங்கத்தை தோற்கடிப்பதே – கரு தலைமையில் கொழும்பில் பேச்சுவார்த்தை

இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பிற எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் கலந்து கொண்டிருந்தன.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக்கட்சியின் துணைத் தலைவர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் அடங்குவதாக தெரியவருகிறது.

“ஒரு நியாயமான சமுதாயத்திற்கான தேசிய இயக்கம்” என்ற பெயரில் ஏற்பாடு செய்த எதிர்க்கட்சியின் அனைத்து கட்சி கூட்டணிக்கான ஆரம்ப மாநாடு கொழும்பில் உள்ள ஜானகி விருந்தக வளாகத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ருவான் விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில், புதிய இயக்கத்தின் கவனம் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுவதும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை தவிர்த்து ஒரு குறிக்கோளுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு ஜே.வி.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அந்த கட்சி கலந்து கொள்ளவில்லை.

ஒரு நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்யும் எதிர்கால பேச்சுவார்த்தைகளில் ஜே.வி.பி கலந்து கொள்ளும் என்று நம்புவதாக ருவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்கால விவாதங்களில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் இறுதி இலக்கு அரசாங்கத்தை தோற்கடிப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!