ரணில் விக்ரமசிங்கவை நேரில் விமர்சித்த முன்னாள் அமைச்சர் திகாம்பரம்

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது குறித்து அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சி பிரசாரம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது.

இந்த சந்திப்புக்கான காரணம் உட்பட அனைத்து தகவல்களை திகாம்பரம், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களுக்கு வழங்கியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தது உண்மை என்ற போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்து வரும் பிரசாரம் அதற்கு காரணம் இல்லை என தெரியவருகிறது.

திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணியின் சார்பில் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நீக்கப்பட்டமை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தவே அவர், ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் பல உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து வருவதால், அவர்களை உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட 160 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பதவிகளில் இருந்து நீக்க அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த பிரச்சினையை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள திகாம்பரம், ரணில் விக்ரமசிங்கவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தமது கட்சி எந்த உடன்படிக்கைகளை செய்து கொள்ளாது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டதாகவும் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படவில்லை என்ற அடிப்படையில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டாம் எனவும் திகாம்பரம் கூறியுள்ளார்.

எனினும் ரணில் விக்ரமசிங்க இதற்கு பதில் எதனையும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெற்றது.

அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்து வந்ததுடன் அந்த அரசாங்கத்தில் பழனி திகாம்பரம் அமைச்சராக பதவி வகித்தார்.

எனினும் அப்போது பழனி திகாம்பரம் தலைமையிலான கட்சியின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டதுடன் உடன்படிக்கை எதனையும் செய்துக்கொள்ளாது வாய்மொழி மூல இணக்கத்தின் அடிப்படையில் போட்டியிட்டதாக தெரியவருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!