ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பிய கைதி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சிறையொன்றிலிருந்து 25 வருட சிறைத்தண்டனை அனுபவித்த ஆபத்தான குற்றவாளியொருவர் ஹெலிக்கொப்டரை பயன்படுத்தி தப்பிச்சென்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரெடொய்ன் பைட் என்ற நபரே இவ்வாறு சிறையிலிருந்து ஹெலிக்கொப்டர் மூலம் தப்பிச்சென்றுள்ளார்.

குறிப்பிட்ட நபர் பாரிய கொள்ளைச்சம்பவமொன்றில் ஈடுபட்டமைக்காக 25 வருடசிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்களுடன் வந்த சிலர் சிறைச்சாலை வாசலில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கைதி ஹெலிக்கொப்டர் மூலம் தப்பிச்சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையின் பின்பகுதி ஊடாக எவருக்கும் காயம் ஏற்படுத்தாமல் கைதியும் அவரது சகாக்களும் தப்பிச்சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுதமேந்திய நபர்கள் மற்றொருநபரை பணயக்கைதியாக பிடித்துச்சென்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதி தப்பிச்செல்வதற்கு பயன்படுத்திய ஹெலிக்கொப்டரை மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கைதி 2013 ம் ஆண்டு ஏற்கனவே சிறையிலிருந்து தப்பிய பின்னர் கைதுசெய்யப்பட்டவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.