விரைவில் பொதுத் தேர்தல்: மியன்மார் ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லயிங் உறுதி!

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரையும் ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

இதற்கிடையில் ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தநாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் ராணுவம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இரும்புக்கரம் கொண்டு இந்த போராட்டங்களை ஒடுக்கி வருகிறது.

ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 900-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய 6 மாதங்களுக்கு பிறகு தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது.

ராணுவத்தை உள்ளடக்கிய மியான்மரின் தேசிய நிர்வாக கவுன்சில் இந்த இடைக்கால அரசு அறிவித்துள்ளது. தேசிய நிர்வாக கவுன்சிலின் தலைவரும் ஆயுதப் படைகளின் தளபதியுமான மின் ஆங் ஹலைங் விரைவில் பிரதமராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மியான்மாரில் பல கட்சிகளும் பங்கேற்கும் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டு ஆண்டுகளில் அந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், மியான்மாரில் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன். தற்போதைய அவசரநிலை 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!