காலாவதியான உத்திகளை பின்பற்றும் ராஜபக்ச அரசாங்கம்! அனுரகுமார திஸாநாயக்க குற்றச்சாட்டு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்துக்கு சரியான உத்திகள் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம், பணத்தை அச்சிடுதல், கடன் பெறுதல் மற்றும் அரச சொத்துக்களை விற்பனை செய்வது போன்ற தோல்வியுற்ற மற்றும் காலாவதியான உத்திகளைப் பின்பற்றுகிறது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர்,

நாடு வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கையுடன் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள், ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு ஏமாற்றமடைந்து விரக்தியடைந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய நிர்பந்திக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ச ஆட்சி குறுகிய காலத்திற்குள் மக்களின் அவமானம் மற்றும் எதிர்ப்புக்கு உட்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது ஜனாதிபதியின் தனிப்பட்ட குறைபாடு காரணமாக மட்டும் அல்ல. இது நீண்ட காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையின் விளைவாகும்.

தற்போதைய ஆட்சியின் போது இந்த நிலைமை மோசமடைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு டிரில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது .

கடந்த வாரம் ஒரு நாளில் 200 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. அத்துடன் சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷில் இருந்து கடன் பெற முயற்சிக்கப்படுகிறது.

மூன்றாவது தீர்வாக அரச சொத்துக்களை விற்பனை செய்யும் முனைப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!