எரிசக்தி அமைச்சு அலுவலகம் மூடப்பட்டது

கொரோனா அச்ச நிலைமை காரணமாக எரிசக்தி அமைச்சு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எரிசக்தி அமைச்சு அலுவலகம் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமைச்சர் ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தொற்று உறுதி செய்யப்படாத போதும் தாம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் விரைவில் குணமடைவார்கள் எனவும், அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நேற்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 27 ஆம் திகதி முதல் தம்முடன் தொடர்புடைய அனைத்து அரச பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!