சிங்கப்பூரில் இறக்கும் தருவாயில் பிறந்த குழந்தை: சாதித்த மருத்துவர்கள்!

உலகின் மிகச் சிறிய குழந்தை என நம்பப்படும் குறைமாதத்தில் பிறந்த குழந்தை, ஒரு வருடங்களுக்கு பிறகு தற்போது மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், ஜூன் 2020-ல் பிறந்த க்வெக் யூ சுவான் (Kwek Yu Xuan) எனும் இந்த பெண் குழந்தை வெறும் 6 மாத (25 வாரம்) சிசுவாக இருந்தபோது, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசரநிலையில் அறுவைசிகிச்சை பிரசவத்தில் பிறந்தது.

கிட்டத்தட்ட 4 மாதங்கள் முன்கூட்டியே பிறந்த இந்த குழந்தை வெறும் 212 கிராம் (7.5 அவுன்ஸ்) எடையுடன் இருந்தது. இது ஒரு ஆப்பிள் பழத்தின் சராசரி எடை என்று சொல்லலாம்.

இந்த குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கருதினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு வருடத்திற்கும் மேலாக (கிட்டத்தட்ட 13 மாதங்கள்) மருத்துவமனையின் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உடல்நிலை முன்னேற்றத்துடன் பாதுகாப்பாக உள்ளது.

சென்ற ஜூலை மாதம் 6.3 கிலோகிராம் (13.9 பவுண்டுகள்) என்ற ஆரோக்கியமான எடையில் இருந்த அந்தக் குழந்தை, கடந்த வார இறுதியில் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தற்போதைய நிலையில், Kwek Yu Xuan தான் ஆரோக்கியமான நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உலகின் மிக இலகுவான குழந்தை (lightest baby) என நம்பப்படுகிறது.

அயோவா பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு பதிவேட்டில், 2016-ல் ஜேர்மனியில் பிறந்த 230-கிராம் (8.1-அவுன்ஸ்) குழந்தை இலகுவானது என்று பட்டியலிடுகிறது. அதே நேரத்தில், தற்போதைய கின்னஸ் உலக சாதனையாக அமெரிக்காவில் 2018-ல் பிறந்த 245 கிராம் (8.6-அவுன்ஸ்) குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!