அச்சத்தினால் கோவிட் தொடர்பான உண்மைகள் மறைக்கப்படுகிறதா? ஜே.வி.பி கேள்வி

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கமைய தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுக்காமையின் காரணமாகவே இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கோவிட் தொற்றால் உயிரிழக்க காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் அதன் தவறை மறைத்து கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசியை நிராகரித்து தாமாகவே மரணத்தை தேடிக்கொண்டார்கள் என்று பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது.

கோவிட் தொற்றாளர்கள் தொடர்பில் அரச தரப்பிலும், பிரதேச மட்டத்திலும் வெளியிடப்படும் தரவுகளுக்கிடையில் பாரிய வித்தியாசம் நிலவுகிறது.

உண்மை தரவுகளைக் கூறினால் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீரவிற்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என்ற அச்சத்தினால் இவ்வாறு உண்மைகள் மறைக்கப்படுகிறதா?

இதுவரையில் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளவர்கள் கோவிட் தொற்றை அவர்களாகவே தொற்றிக் கொண்டு தவறிழைத்து உயிரிழக்கவில்லை.ஆனால் அரசாங்கம் உயிரிழந்தவர்கள் தடுப்பூசியை நிராகரித்ததைப் போன்று பிரசாரம் செய்து கொண்டிருக்கிறது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களுக்கமைய தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படாமையே 60 வயதுக்கு மேற்பட்டோர் அதிகளவில் உயிரிழக்க காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!