முடங்குமா நாடு? – இன்று முக்கிய முடிவு!

ஜனாதிபதி தலைமையிலான கொவிட்19 ஒழிப்பு செயலணி இன்று கூடவுள்ளது, இதன்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டை சில வாரங்களுக்கு முடக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய தினத்திற்குள் முடக்க நிலைக்கு செல்லாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளின் மூலம் நாட்டை முடக்க வைப்போம் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன், விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார துறையினரும், எதிர்க்கட்சியினரும் கடந்த சில நாட்களாக இது குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

மேலும், காலம் தாழ்த்தாது குறைந்தது ஒரு வாரமாவது நாட்டை முடக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் மூலம் நேற்று வலியுறுத்தியிருந்தனர்.

அதேநேரம், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 பங்காளிக் கட்சிகளும் நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நேற்று முன்வைத்திருந்தன.

இவ்வாறான ஒரு நிலையில், ஜனாதிபதி தலைமையிலான கொவிட்19 ஒழிப்பு செயலணி இன்று கூடவுள்ளதுடன், இதன்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார் என முன்னர் தெரிவிக்கப்பட்டது, எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தற்போது, அறிவிக்கப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!