லண்டனில் உள்ள நிரூபமாவை இன்டர் போல் மூலம் அழைத்து வர நடவடிக்கை!

பண்டோரா ஆவண சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும், லண்டன் சென்றுள்ள அவர் விசாரணைக்கு வருகை தராவிட்டால் சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்கள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை “பண்டோரா ஆவணங்கள்” அண்மையில் வெளியிட்டிருந்தது.

பல உலக தலைவர்களின் இரகசியங்களை வெளிக்கொண்டு வந்துள்ள, பண்டோரா ஆவணங்களில் இலங்கையின் பிரபல தொழிலதிபர் திருக்குமார் நடேசனின் மனைவியும், ராஜபக்சர்களின் நெருங்கிய உறவினருமான, நிரூபமா ராஜபக்ஷவின் பெயரும்,கடந்த மூன்றாம் திகதி வெளியானது.

நிரூபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் பல இரகசிய நிறுவனங்கள் மூலம் செய்த பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களும் பண்டோரா ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பண்டோரா ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, 2011ம் ஆண்டு நிலவரப்படி திருக்குமார் நடேசனின் சொத்துக்களின் பெறுமதி 160 மில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,பண்டோரா ஆவணங்கள் வெளியாகுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிரூபமா ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும்,சர்வதேச பொலிஸார் ஊடாக அவர் நாட்டிற்கு அழைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், நிரூபமா ராஜபக்ச, பிரதியமைச்சராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!