எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்க சட்டவிரோத உடன்படிக்கை!

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் சட்டவிரோத உடன்படிக்கையை மேலும் 50 ஆண்டுகளுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது மிகப்பெரிய மோசடியாகும், அரசாங்கம் இந்தியாவின் தேவைக்காக துணை நிற்கின்றது எனவும் கள்ளத்தனமாக செய்துகொண்ட ஒரு உடன்படிக்கையை நியாயப்படுத்தி அரசாங்கமே இந்தியாவிற்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கின்றது எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் புதிய உடன்படிக்கை ஒன்றினை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித்த இது குறித்து கூறுகையில்,
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கவில்லை, 2003ஆம் ஆண்டு வரி ஒப்பந்தமொன்றே செய்துகொள்ளப்பட்டது.

அப்போது அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொட இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்தார். ஆனால் இறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அமைச்சர் கம்மன்பில மாற்றுக்கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது பொய் என்பதை எம்மால் தெளிவாக நிருபிக்க முடியும்.

இலங்கை -இந்திய ஒப்பந்தத்தில் எந்த இடத்திலும் எண்ணெய் குதங்கள் குறித்து பேசவில்லை. ஆனால் இணைப்புகளில் உள்ளது, அதனை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம். இது கடிதம் மூலமாக வழங்கப்பட்டது, எந்த ஒப்பந்தத்திலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே ஒப்பந்தம் இல்லாத ஒன்றை எம்மால் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சுதந்திர தொழிற்சங்கத்தின் தலைவர் பந்துல சமன்குமார இது குறித்து கூறுகையில்,

திருகோணமலை எண்ணெய் குதங்களை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதேபோல் இந்தியாவிற்கு இது முழுமையாக உரித்தாக ஒன்றல்ல, சட்டவிரோதமாக தன்வசப்படுத்தியுள்ளனர்.

2003ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்று உள்ளது. அதில் 35ஆண்டுகளுக்கு இந்த எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆனால் இது சட்டவிரோதமான ஒப்பந்தம் என்பதே எமது நிலைப்பாடு, இது குறித்த வழக்கும் தொடுத்துள்ளோம்.
எனவே இலங்கைக்கு சொந்தமான நிலத்தையும் எண்ணெய் குதங்களையும் எமக்கு சொந்தமில்லை என அரசாங்கம் சொல்வதன் மூலமாக இந்தியாவுடன் ஏதேனும் உடன்படிக்கை செய்துகொள்ளவா என்ற சந்தேகம் எழுகின்றது.

எனவே இனியும் அர்த்தமில்லாத ஒரு ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு தீர்மானம் எடுக்க வேண்டாம் என அரசாங்கத்தையும் வலுசக்தி அமைச்சரையும் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!