மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அந்தஸ்து- சட்டத்துக்கு முரணானது!

பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற முடியாத மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்குவது சட்டத்துக்கு முரணானது. அவ்வாறு இடம்பெற்றால் அவர் தான்தோன்றித்தனமாக செயற்படுவதற்கு இடமிருக்கின்றது. அதனால் அவ்வாறான நியமனத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சி மஹரகம தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சுதத் ஜயசுந்தர தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களைக்கொண்டே ஜனாதிபதி மற்றும் பிரதமர் அமைச்சரவையை அமைக்கமுடியும். அதேபோன்று அமைச்சரவை பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டிருக்கின்றது.
அதன் பிரகாரம் அமைச்சர் ஒருவர் மேற்கொள்ளும் தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டால் அதற்கு குறித்த அமைச்சர் பதில் கூறியாகவேண்டும். அமைச்சர் அவ்வாறு செயற்படாவிட்டால் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து அவரை அமைச்சுப்பதவியில் இருந்து நீ்க்க முடியும்.

அவ்வாறு இருக்கையில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்பராலுக்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்குவதன் நோக்கம் என்ன?. பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கி ஆளுநராக இருந்துகொண்டு தேவையான அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ளவதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

குறிப்பாக நாட்டின் நிதி தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வது, சர்வதேச நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது மற்றும் நிதி தொடர்பான புரிந்துணவர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது மத்திய வங்கி ஆளுநராகும்.
அவ்வாறான ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கினால் அவர் நினைத்த பிரகாரம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்கவும் முடியாது.

மேலும் மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு கீழே இருக்கின்றது. மத்திய வங்கி தொடர்பான கேள்விகளுக்கு நிதி அமைச்சரே பாராளுமன்றத்துக்கு பதில் சொ்ாவேண்டும். அப்படி இருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் அல்லா நிவாட் கப்ராலுக்கு அமைச்சரவை அந்தஸ்து வழங்கி, அரசாங்கம் மேற்கொள்ள உள்ள திட்டம் என்ன?.

நிதி அமைச்சரான பசில் ராஜபக்ஷவுக்கு மத்திய வங்கியில் பொறுப்பு என்ன? 7 அறிவு உள்ளவர் என்றவரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது ஒரு அறிவும் இல்லாதவர் போன்றே இருக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பிரதமருக்கு நிகராக ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கினால் என்ன நடக்கும்.

அத்துடன் மத்திய வங்கி ஆளுநருக்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்கினால் அவருக்கு வரப்பிரசாதங்களும் கிடைக்கின்றன. அவருக்கு தேவையானவர்களை மத்திய வங்கியில் உயர் பதவிகளில் நியமித்துக்கொள்ளும் அதிகாரம் கிடைக்கின்றது. நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு அவ்வாறான பதவி வழங்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை.
எனவே பாராளுமன்றத்துக்கு பொறுப்புகூற முடியாத ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்து வழங்குவது சட்டத்துக்கு முரணானது. அவ்வாறான நியமனத்தை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!